அனைத்து விண்ணப்பங்களையும் முறையாக சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணாநகர் நியாயவிலைக் கடை , தென்கீரனூர் கிராம கற்றல் மையம் , விளம்பார் கிராம சேவை மைய கட்டிடம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் இன்று ( 07.08.2023 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க , கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜுலை 24 - ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது . ஜுலை 24 - ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 - ஆம் தேதி வரை நடைபெற்ற முதற்கட்ட முகாம்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடும்ப அட்டைகளில் 80 சதவீத குடும்ப அட்டைகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது . இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவேற்றும் பணி ஆகஸ்ட் 5 - ஆம் தேதி முதல் தொடங்கிய ஆகஸ்ட் 16 - ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .
அதன்படி , அண்ணாநகர் நியாயவிலைக் கடை , தென்கீரனூர் கிராம கற்றல் மையம் , விளம்பார் கிராம சேவை மைய கட்டிடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
இம்முகாம்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்களின் வருகை குறித்தும் , விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் போது ஏதேனும் சிரமம் ஏற்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார் . மேலும் , விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யவரும் பெண்களிடம் இத்திட்டம் குறித்து விளக்கிக் கூறிடவும் , விண்ணப்பங்கள் முறையாக சரிபார்த்து பதிவேற்றம் செய்திடவும் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கினார் . இத்திட்டம் குறித்து விண்ணப்பிக்க வருகை புரிந்த பெண்களிடம் , இத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார் .















