அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரையின்படி , தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் , மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 155 - வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு , அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி , மரியாதை செலுத்தி , தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் ( கூ.பொ ) / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் அவர்கள் இன்று ( 02.10.2023 ) தொடங்கி வைத்தார் .
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் பல லட்சக்கணக்கான ஏழை எளிய நூற்போர் , நெசவாலர்களுக்கு இடையராத வேலை வாய்ப்பினை அளித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி ஆற்றி வருகிறது . காந்தியடிகளின் சுதந்திர போராட்ட கால சின்னமாக கதர் ஆடை திகழ்கிறது . ஒவ்வொரு இந்தியரும் நம்முடைய தேசிய தினங்களாகிய சுதந்திர தினம் , குடியரசு தினம் , காந்தியடிகளின் பிறந்த தினம் , மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினம் ஆகிய தினங்களில் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி உடுத்தி , கதர் நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் .
மேலும் , கள்ளக்குறிச்சி மாவட்ட கதர் விற்பனை அங்காடி மூலமாக தரமான அசல் கதர் பட்டு புடவை , கதர் பருத்தி ரகங்கள் மற்றும் கதர் பாலியஸ்டர் ரகங்கள் , வேஸ்டி , துண்டு , ரெடிமேட் சட்டை , போர்வை , தரமான இலவம் பஞ்சு மெத்தை , மெத்தை விரிப்புகள் , தலையணை , தலையணை உறை , குளியல் மற்றும் சலவை சோப்பு வகைகள் , தேன் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன .
மேலும் , கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ .98 இலட்சத்து 40 ஆயிரம் முழுமையாக எய்தப்பட்டது . நடப்பாண்டு ரூ .1 கோடியே 3 இலட்சத்து 50 ஆயிரம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . காதி கிராப்டில் இந்த ஆண்டும் சிறப்பு விற்பனையாக கதர் , பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது . அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் .
இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ( பொது ) திரு.அனந்த சயனன் , கதர் அங்காடி மேளாலர் திரு.டி.கலியமூர்த்தி , அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர் .















