ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் ஆய்வு செய்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் மற்றும் கீழத்தாழனூர் ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் இன்று ( 12.07.2023 ) ஆய்வு மேற்கொண்டார் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ .7.43 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் , ரூ .10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளையும் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ .5.91 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் பெண்கள் சுகாதார வளாக பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து , ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை அகற்றிடவும் , நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார் .
தொடர்ந்து , கீழத்தாழனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ .5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து , மேலும் திருக்கோவிலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சட்டமன்ற , பாராளுமன்ற , மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிப் பணிகளையும் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் , ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் .
இவ்வாய்வின்போது , திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஜெ.கண்ணன் ( கி.ஊ ) , திருமதி.சு.கஸ்தூரி ( வ.ஊ ) , ஊராட்சிமன்ற தலைவர்கள் , ஒன்றிய உதவி பொறியாளர்கள் , பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர் .















