ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தலைமையில் ஊழல்
எதிர்ப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி அனைத்து அரசு அலுவலர்களும் இன்று
(31.10.2023) ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 06-ம் தேதி வரை ஊழல்
விழிப்புணர்வு வாரம் (Vigilance Awarness Week) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,
இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் "நமது நாட்டின் பொருளாதாரம்
அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான்
நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்”.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு,
நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க
வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே, "நான் அனைத்து செயல்களிலும்
நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது
கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும்
வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக
பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு
முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய
அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்” என்று
அனைத்து அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழி நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன்,
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திருமதி.பா.ஷெர்லி ஏஞ்சலா,
மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.எஸ்.தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்
திரு.பெ.தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.















