செய்திகள் :

எல்லோருக்கும் அரசின் எல்லா திட்டமும் கொண்டு சேர்த்து சம நிலையை உருவாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமென மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் தெரிவித்தார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலதீபமங்கலம் கிராமத்தில் , சத்துணவு சமையலறை கட்டிடம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்.க.பொன்முடி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் முன்னிலையில் இன்று ( 27.08.2023 ) வழங்கினார் . மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய சீர்மிகு வழிகாட்டுதலின்படி , தமிழகத்தில் பல்வேறு அரசு நலத்திட்ங்களும் , வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது . அதனடிப்படையில் திருக்கோவிலூர் சட்டமன்ற பகுதிகளில் எண்ணற்ற வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . குலதீபமங்கலம் கிராம ஊராட்சியில் ரூ . 24.23 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும் மற்றும் ரூ .5.65 இலட்சம் மதிப்பீட்டில் இருப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது . உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிதம் இடம் ஒதுக்கீடு செய்தவர் நம்முடைய தமிழக முதலமைச்சர் ஆவார் . அதனடிப்படையில் தான் இவ்வூராட்சியிலேயே தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக உள்ளனர் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , மாணவர்களின் நலன் கருதி , 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து , தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார்கள் . கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களும் , கல்வி கற்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை உருவாக்கியுள்ளார் . இத்திட்டத்தின் செயல்பாடுகளை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நேர்காணலிடவேண்டும் . பெரியார் , அண்ணா , கலைஞர் ஆகியோரின் சாதனையாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு பள்ளிகள் , அனைத்து மாவட்டங்களிலும் அரசு கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன . இதுதான் திராவிட மாடல் அரசாகும் . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் 20 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன . இந்த 20 ஊராட்சிகளிலும் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து கிராமங்களிலும் அனைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள் . அதன்படி , சாலைபணிகள் , குடிநீர் பணிகள் , நியாய விலை கடைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதலிருந்து பெண்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள் . ஏற்கனவே பள்ளி கல்லூரி மாணவ , மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தைசெய்ல்படுத்தியுள்ளார் . தற்போது அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம் திட்டத்தை வழங்கியுள்ளார்கள் . மேலும் , செப்டம்பர் 15 முதல் தகுதியுள்ள ஏழை எளிய மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் ரூ .1,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது . இத்திட்டதின்கீழ் 1 கோடி 65 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது . இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது . முதியோர் உதவி தொகை பெறும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இல்லை என்ற விதியை தளர்த்தி இப்போது முதியோர் உதவி தொகை பெறும் குடும்பங்களை சார்ந்த பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள் . 


இந்த ஆண்டு கலைஞரின் 100 வது பிறந்தநாளை கொண்டாடும் ஆண்டாகும் . இந்த ஆண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டங்கள் சாதனைகளை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி , நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி , சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளின்கீழ் நலத்திட்ட உதவிகள் , வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது . மேலும் , அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து , மேற்படிப்பிற்கு செல்லும் அனைத்து மாணவியர்களுக்கும் 


புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ .1,000 வழங்கப்பட்டு வருகிறது . 


தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை எளிய கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காகவே நீட்தேர்வை ரத்து செய்ய கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் . 10 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ .3,000 மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகமும் , 1 பயனாளிக்கு ரூ .5,000 மதிப்பிலான சலவை பெட்டியும் , 10 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை மூலமாக ரூ .22,000 மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள் கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டது . எல்லோருக்கும் அரசின் எல்லா திட்டமும் கொண்டு சேர்த்து சம நிலையை உருவாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கமென மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார் . 


இந்நிகழ்வில் , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.நா.புகழேந்தி , விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் மரு.இரா.லட்சுமணன் , விழுப்புரம் மாவட்டட ஊராட்சி குழு தலைவர் திரு.மா.ஜெயசந்திரன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ச.செல்வராணி , மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.மு.தங்கம் , குலதீபமங்கலம் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.பா.சாந்தி பாண்டியன் , குலதீபமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.து.சாந்தி துரைசாமி , திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரு.ஜெ.கண்ணன் ( வ.ஊ ) , அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .