செய்திகள் :

" ஒருவரின் கண்தானம் மூலம் இருவர் உயிர் வாழலாம் ” எனவே கண்தானம் செய்து , சமூகத்தில் மக்களின் அன்பை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய கண்தான இருவார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 08.09.2023 ) கொடியசைத்து தொடங்கி வைத்தார் . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கண்தானம் செய்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது . அதனடிப்படையில் , இன்றைய தினம் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு பேரணி துவங்கி வைக்கப்பட்டது . 


மேலும் , நமது மறைவிற்கு பிறகு நமது கண்களை பார்வையற்றோர்க்கு பயன்படும் வகையில் தானம் அளிப்பதே கண்தானம் ஆகும் . சமூக சிந்தனை உள்ள அனைவரும் கண்தானம் செய்யலாம் . வயது , இனம் , மொழி போன்ற எதுவும் தேவையில்லை . இரத்த கொதிப்பு , நீரிழிவு போன்ற நோய்கள் உள்ளவர்களும் கண்தானம் செய்யலாம் . கண்களில் உள்ள கருவிழிகள் இரண்டும் நல்ல நிலையில் உள்ள அனைவரும் கண்தானம் செய்யலாம் . 


நமது நாட்டில் இலட்சக் கணக்கான மக்கள் கருவிழி பாதிப்பினால் பார்வையின்றி உள்ளார்கள் . அவர்களுக்கு கண்தானம் மூலம் மாற்றுக்கண் அறுவை சிகிச்சை ( KERATOPLASTY ) செய்து பார்வை அளிக்க முடியும் . உடலில் உயிர் பிரிந்த 6 மணி நேரத்திற்குள் கண்களை தானம் அளிக்கலாம் . ஒருவரின் கண்தானம் மூலம் இருவர் உயிர் வாழலாம் . எனவே கண்தானம் செய்து , சமூகத்தில் மக்களின் அன்பை பெறவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


இப்பேரணியில் டாக்டர் ஆர்.கே.எஸ் கல்லூரியின் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவ , மாணவியர்கள் " உடலுக்கு அழிவு உண்டு , கண்களுக்கு அழிவு இல்லை ” “ எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை கொடுத்துச் செல்வோம் கண்ணிரன்டை ” “ கருணை இருந்தால் போதும் , இறந்த பின்பும் கண்தானம் செய்யலாம் ” என்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பு வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . 


இந்நிகழ்வில் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் டாக்டர் ஆர்.கே.எஸ் கல்லூரி முதல்வர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .