கல்வராயன்மலைப்பகுதி மக்களுக்கு கறவை மாடு கடனுதவி வழங்குவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , கறவை மாடு கடனுதவி வழங்குவதற்கான தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் 21.06.2023 நடைபெற்றது .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கக்கூடிய கல்வராயன் மலைப்பகுதிகுட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் , கறவை மாடு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கிகள் , மகளிர் திட்டம் , வாழ்ந்து காட்டுவோம் திட்டம் , கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது .
மேலும் , மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் மற்றும் இதர முகாம்கள் வாயிலாக கல்வராயன் மலைப்பகுதிகளில் பெறப்பட்ட மனுக்களில் அதிக அளவில் கறவை மாடு வேண்டி மனு அளித்துள்ளனர் . இம்மனுவின் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு , இப்பகுதி மக்களுக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் அதிக அளவில் கறவை மாடு வழங்குவதற்கான
நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை
மேற்கொள்ளப்பட்டது . அதனடிப்படையில் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட மக்களுக்கு விரைவில் கறவை மாடு கடனுதவி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இக்கூட்டத்தில் , மகளிர் திட்ட அலுவலர் திரு.சு.சுந்தர்ராஜன் , இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு.என்.கௌரி சங்கர்ராவ் , திட்ட அலுவலர் ( பழங்குடியினர் நலன் ) திரு.க.கதிர் சங்கர் , வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் திரு.தினகர் ராஜ்குமார் , மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் திரு.தியாகராஜன் , உதவி இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .















