செய்திகள் :

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட துணி இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் எச்சரிக்கை

post image

நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கவும் , விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும் , கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் , மத்திய அரசு கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு , சென்னை , குறளகம் 2 ஆம் தளத்தில் துணை இயக்குநர் , அமலாக்க அலுவலகம் , செயல்பட்டு வருகிறது . 


கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5 - ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை , பட்டு சேலை , வேட்டி , துண்டு , லுங்கி , பெட்சீட் , ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு , விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது . இந்த இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டம் 1985 - ன் படி தண்டனைக்குரிய செயலாகும் . கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் . 


ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த இரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் . நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும் . எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கவும் , நீதிமன்ற அபராதம் மற்றும் சிறை தண்டனையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும் . 


கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகங்கள் குறித்து துணை இயக்குநர் , அமலாக்கம் , குறளகம் 2 ஆம் தளம் , சென்னை 104 - ல் இயங்கி வரும் துணை இயக்குநர் அமலாக்கம் அலுவலகத்தையோ அல்லது தொலைப்பேசி மூலமாகவோ ( 044-25346295 ) தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .