ஜீலை -18 தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு , பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ , மாணவியர்களின் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியும் , செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் இன்று ( 18.07.2023 ) தொடங்கி வைத்தார் .
தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 01.11.1956 ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது . தமிழ் உணர்வாளர்கள் , பல்வேறு அரசியல் கட்சிகள் , தமிழ் கூட்டமைப்பினர் , தமிழஞர்கள் , தமிழ் ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1967 ஆம் அண்டு ஜுலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர் . அதனை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆண்டு தோறும் ஜீலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக சிறப்பாக கொண்டாடப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள் .
அதன்படி , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க , தமிழ்நாடு நாளை கொண்டாடிடும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே தமிழ்நாடு வரலாறு குறித்து கட்டுரை போட்டி , பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது . கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ 10,000 , இரண்டாம் பரிசு ரூ .7,000 , மூன்றாம் பரிசு ரூ .5,000 - க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் .
தொடர்ந்து , பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு வரலாற்றை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் பள்ளி மாணவ , மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் . இப்பேரணியில் , சுமார் 500 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக்கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர் . இப்பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் முடிவடைந்தது .
அடுத்ததாக , செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் . இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை விளக்கும் வகையிலும் , தமிழ்நாட்டின் வரலாற்றை விளக்கும் வகையிலும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது . தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி இன்று முதல் 23.07.2023 வரை நடைபெறும் . இப்புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ , மாணவியர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் .
இந்நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.க.சரவணன் , முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கோ.கிருஷ்ணபிரியா , அரசு அலுவலர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ , மாணவியர்கள் கலந்து கொண்டனர் .















