தரமான பேறுகால சிகிச்சைகளும் , போதிய மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திட மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஒருபகுதியான மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 06.07.2023 ) திடீர் ஆய்வு மேற்கொண்டார் .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிக அளவில் மகப்பேறு நடைபெற்று வருகிறது . இம்மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு , பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் உடனிருப்பவர்களிடம் மருத்துவ வசதிகள் மற்றும் பேறுகால சிகிச்சை எப்படி உள்ளது , மருத்துவர்கள் எத்தனை முறை வார்டிற்கு வந்து பரிசோதிக்கிறார்கள் என கேட்டறிந்தார் .
தொடர்ந்து , பேறுகால சிகிச்சை பிரிவு , பேறுகால கவனிப்பு பிரிவு , பேறுகால அறுவை சிகிச்சை பிரிவு , அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு , பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு , ஒளிக்கதிர் சிகிச்சை அறை , மகப்பேறு காத்திருப்போர் அறை உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து , மகப்பேறு பெண்களிடம் குறைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார் . பின்னர் , அனைத்து வார்டுகளிலும் உள்ள கழிவறைகள் தூய்மையாக பராமரித்திடவும் , போதிய அளவு தண்ணீர் வசதியும் , அனைத்து வார்டுகளில் உள்ள ஜன்னல்களுக்கு கொசு வலைகள் அமைத்திடவும் , மின்விசிறி மற்றும் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் , மருத்துவதுறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார் .
பின்னர் , அதிகமான குழந்தைகள் பிறப்பு இம்மருத்துவமனையில் நடைபெறுவதால் கூடுதலான மகப்பேறு படுக்கைகளும் , பிரசவ வலி வருவதற்கு முன்னதாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு கூடுதலாக 40 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொடுத்திடவும் , கூடுதலான மருத்துவர்கள் , செவிலியர்கள் , பணியாளர்கள் நியமித்து தரமான பேறுகால சிகிச்சைகள் மேற்கொள்ளவும் , போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திடவும் மருத்துவ அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் .
இந்நிகழ்வில் , மருத்துவ கல்லூரி மருத்துவமனை உதவி நிலைய மருத்துவர் மரு.பொற்செல்வி , மகப்பேறு மருத்துவர்கள் மரு.அனிதா , மரு.ஜெயபாரதி , குழந்தைகள் நல மருத்துவர் மரு.செந்தில்ராஜா மற்றும் செவிலியர்கள் , மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர் .















