செய்திகள் :

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் பாரம்பரிய விவசாயப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , ஏ.கே.டி பள்ளி கலையரங்கத்தில் , கிரியேட் நமது நெல்லை காப்போம் , ஏ.கே.டி நினைவு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் இணைந்து நடத்தும் 17 வது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளை பொருள் வணிகத் திருவிழா பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் இன்று ( 22.08.2023 ) தொடங்கி வைத்தார் . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய சாகுபடி மிகநிறைந்த மாவட்டமாகும் . இங்கு நெல் , கரும்பு , மரவள்ளி கிழங்கு , மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது . இன்று நடைபெறும் 17 வது தேசிய நெல் திருவிழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் . நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் . வேளாண்மை துறையில் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன் . ஆகையால் வேளாண்மை தொடர்பான பணிகள் , வேளாண்மை குறித்து பற்றி நன்கு அறிவேன் . 


மனிதர்கள் உயிர் வாழ உணவு , தண்ணீர் , காற்று இன்றியமையாததாகும் . இதில் உணவு முக்கியமானதாகும் . இயற்கையான உணவு முறைகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம் . இன்றைய நவீன காலத்தில் மனிதர்களுக்கு பெரும்பாலான நோய்கள் ஏற்படுவது துரித உணவு , சரியான சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளாதது , அதிக அளவு ரசயான கலப்பு உணவு பொருட்களை உட்கொள்வதே ஆகும் . இதனால் பெருமளவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படுகிறது . பண்டைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இயற்கையான முறையில் வேளாண் விளைப்பொருட்களை விளைவித்து உண்டு வாழ்ந்து நீண்ட ஆயுளுடன் நோயற்று வாழ்ந்தனர் . அவ்வாறாக நாமும் இருக்க வேண்டுமென்றால் பாராம்பரியமான நெல் வகைகளை பயிரிட்டும் , சிறுதானியங்களை அதிக அளவில் பயிரிடவும் வேண்டும் . 


விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரசாயன உரங்கள் , மருந்துகள் கலப்பில்லாமல் இயற்கையான முறையில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் . இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் . அந்த வகையில் மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் , நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுஅரசு விதை பண்ணைகளில் பாராம்பரிய நெல் உற்பத்தி செய்யப்பட்டு , விவசாயிகளுக்கு நெல் வழங்கப்படுகிறது . தமிழகத்தில் பெரும்பாலானோர் நெல் வகை சார்ந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகளை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொண்டு அதிக லாபம் ஈட்டி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 


இத்தேசிய நெல் திருவிழா பயிலரங்கம் மூலமாக மாப்பிள்ளை சம்பா , கருப்பு கவனி , தங்க சம்பா , சீரக சம்பா , தூய மல்லி , ஆத்தூர் கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகள் 160 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


முன்னதாக , இயற்கை வேளாண் விதை பொருட்கள் வணிக திருவிழா கண்காட்சியில் பாரம்பரியமான இயற்கை வேளாண் முறையில் விளைவித்துள்ள உணவு பொருட்கள் மற்றும் இயற்கை விதைகள் தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார் . 


இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருணாநிதி , கிரியேட் நமது நெல்லை காப்போம் தலைவர் முனைவர்.பி.துரை சிங்கம் , ஏ.கே.டி நினைவு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி முதல்வர் முனைவர்.ஆர்.தணிகை வேலன் , நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் திரு.எ.பி.அருண்கென்னடி , அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் .