பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் எச்சரிக்கை
பத்திரிக்கையாளர் என்பவர் உண்மை நிகழ்வுகளையும் , பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களையும் , பல்வேறு கோரிக்கைகளையும் செய்தியாக வெளியிடுவதுடன் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்று சேர்த்திடும் வகையில் பெரும்பணியாற்றக் கூடியவர்கள் . அதனால்தான் இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூணாக செயல்படுவது பத்திரிக்கையாளர்கள் கருதப்படுகிறார்கள் . ஆனால் சமீப காலங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில பத்திரிக்கையாளர்களால் பல்வேறு கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது . இது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் என பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறித்துவிடுவதாகவும் , பல்வேறு துறை உயர் அலுவலர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்து , அவதூறு செய்திகள் வெளியிடுவேன் , என வியாபாரிகளை மிரட்டுவதாகவும் , பிரஸ் ( PRESS ) என்று இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பொய்யான ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் பல்வேறு புகார் மனுக்கள் வந்து கொண்டிருக்கிறது . இதுபோன்று சமீபத்தில் சிலர்மீது காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . அதனடிப்படையில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும் .
மேலும் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , சில அரசு அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி , பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருவது தெரியவருகிறது . மேலும் , அரசுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடந்தையாக செயல்படுவதும் , கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு தொடர்பில் உள்ளதும் கண்டறியும் பட்சத்தில் அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை , பத்திரிக்கையாளர் என்ற பெயரில்சிபாரிசு செய்வது அல்லது அலுவலர்கள் மீது பொய்யான அவதூறு செய்தி வெளியிடுவதாக மிரட்டும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கும்படி , அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் , வியாபாரிகள் , அலுவலர்கள் தகுந்த ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அனுப்பினால் , அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தகவல் அளிப்பவர்கள் குறித்த விபரங்கள் பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .















