செய்திகள் :

பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூ .3 இலட்சம் ஊக்கத்தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவிப்பு

post image

தமிழ்நாட்டில் , பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்திடவும் , பாரம்பரிய நெல் விதைகளை இனத்தூய்மையுடன் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்தியை பெருக்கிடவும் , பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் ரூ .3 இலட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது . 


பாரம்பரிய நெல் விதைகளை இனத்தூய்மையுடன் விதை வங்கி அமைத்து பராமரித்து வரும் 10 விவசாயிகளுக்கு தலா 3 இலட்சம் வழங்கப்படுகிறது . பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அக்ரிஸ்நெட் ( AGRISNET ) வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் , குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வெண்டும் , ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் இரகங்களை மறு உற்பத்தி செய்து இனத்தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் . 


மேலும் , இரசாயன உரம் , பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபு சார்ந்த நெல் இரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வெண்டும் . விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் இரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . வயல்களில் உரிய அளவில் சாகுபடி செய்ய வேண்டும் . கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் , இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும் . 


மேலும் , பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்காக அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .