செய்திகள் :

பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

பிற்படுத்தப்பட்டோர் , மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் , மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் இம்மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து , ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தலா ரூ .3.00 இலட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த தமிழக அரசு , அரசு ஆணை வெளியிட்டுள்ளது . 


தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிவ , மிபிவ ( ம ) சீம வகுப்பை சார்ந்த ஆண் , பெண் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி , Single Needle Machine ( ஒற்றை ஊசி இயந்திரம் ) தலா ரூ 20,000 , விதம் 5 எண்ணிக்கை , Over lock Machine ( ஓவர்லாக் இயந்திரம் ) 1- ரூ .30,000 , Cutting Machine ( வெட்டும் இயந்திரம் ) 1 ரூ .15,000 , Cutting Table ( வெட்டும் டேபிள் ) 1 - ரூ .15.000 , Industrial Ironing Table ( இன்டஸ்ட்ரியல் சலவை டேபிள் ) 1 - ரூ .30.000 , Accessories ( உபகரணங்கள் ) ரூ .10,000 , இடைநிகழ் செலவினம் ரூ 50,000 மற்றும் பணி மூலதனம் ரூ .50,000 ஆக மொத்தம் ஒரு குழுவிற்கான தோராய செலவினம் ரூ .3,00,000 வழங்கப்படும் . 


குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 , குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ( Ministry of Micro , Small and Medium Enterprises ) துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் . விதவை , கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் .10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும் . 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும் . குழு உறுப்பினர்கள் பிவ , மிபிவ ( ம ) சீம இனத்தைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் . குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ .1,00,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும் என்பதே பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளாகும் . 


எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் ( ம ) சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று , பூர்த்தி செய்து 15.09.2023 க்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .