செய்திகள் :

பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 46,620 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் வழங்கினார்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ( 24.07.2023 ) நடைபெற்றது . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை , வீட்டுமனை பட்டாக் கோருதல் , விதவை உதவித்தொகை , சாலை வசதி , ஆதரவற்றோர் உதவித்தொகை , பாட்டா மாறுதல் , தொழில் தொடங்க கடனுதவி கோருதல் , ஏரி , குளம் தூர் வாருதல் , பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் , நில அளவை தொடர்பான மனுக்கள் , வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன . மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் . 


முன்னதாக , மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் , அம்மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினார் . 


பின்னர் , கள்ளக்குறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் வட்டம் , ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் இளையனார்குப்பம் ஊராட்சி செயலர் திரு.முருகன் என்பவர் 10.11.2019 அன்று காலமானதை தொடர்ந்து , அவரது மகள் திரு.எம்.ஈஸ்வரா என்பவருக்கு கருணை அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவியாளர் பணிக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் . 


தொடர்ந்து , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ .4,180 மதிப்பீட்டிலான இலவச சலவைப் பெட்டி ரூ .37,620 மதிப்பீட்டில் வழங்கினார் . வடதொரசலூர் அம்மன் நகர் திருமதி.பழனியம்மாள் என்பவரின் மகள் செல்வி.பூஜா ( வயது 11 ) மூளைமுடக்குவாதம் மற்றும் மனவளர்ச்சி குன்றியுள்ளார் , தன் மகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தார் . அம்மனுவை பரிசீலனை செய்து உடனடியாக ரூ .9000 மதிப்புள்ள சக்கர நாற்காலியினை சிறுமிக்கு வழங்கினார் . 


இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் 39 மனுக்களும் , பொது மக்களிடம் 319 மனுக்களும் பெறப்பட்டன . 


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருணாநிதி , அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .