செய்திகள் :

மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் வாயிலாக நீண்ட நாள் தீராத கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்தார் .

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் , அத்தியூர் , மற்றும் இளையனார்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் , ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தம்.க.கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில்  30.06.2023 நடைபெற்றது . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீர்மிகு ஆணையின்படி , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களைத் தேடி நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்று வருகிறது . மாண்புமிகு பொதுப்பணிகள் ( கட்டிடங்கள் ) , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடம்பூர் , அத்தியூர் மற்றும் இளையனார்குப்பம் ஊராட்சிகளில் இன்று இம்முகாம் நடைபெற்று வருகிறது . இன்றுடன் ரிஷிவந்தியம் சட்டம்னற தொகுதிக்குட்பட்டட அனைத்து ஊராட்சிகளிலும் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடத்தப்பட்டு நிறைவு பெறுகிறது . இம்முகாமின் முக்கிய நோக்கமே பொதுமக்களின் இடத்திற்கே சென்று அவர்களின் நீண்ட கால தீராத கோரிக்கைகளை தீர்ப்பதாகும் . 


மேலும் , எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களைத் தேடி மனுக்கள் பெரும் முகாம் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளது . இம்முகாமில் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் . பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு , அரசின் விதிகளுக்குட்பட்டிருப்பின் தகுதியின் அடிப்படையில் கண்டிப்பாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் . நிராகரிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக மனுதாரருக்கு அதன் விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் . 


மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமங்களின் வளர்ச்சிக்காக சாலை வசதி , குடிநீர் வசதி , கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் . கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிக கிராமங்களை உள்ளடக்கியது . எனவே தமிழக அரசின் நலத்திட்டங்கள் கிராமங்களுக்கு சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .