4.11.2023அன்று நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நடைபயிற்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் அழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ்
04.11.2023 அன்று பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்குபெறும் நடைபயிற்சி
நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார், இஆப, அவர்கள்
தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழகம்
முழுவதும் 18 முதல் 69 வயதுடைய மக்களிடையே நடத்தப்பற்ற களஆய்வின் (Step Survey)
இறுதி அறிக்கையின்படி, 23.4% பேர் உயர் இரத்த அழுத்தத்தினாலும், 7.1% பேர் சர்க்கரை
நோயினாலும், 10.5% நபர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினாலும்
பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினரை பாதிப்பிலிருந்து காத்திடும் பொருட்டு, தமிழக
சுகாதாரதுறை சார்பில் வரும் 04.11.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம்
செயல்படுத்தபடவுள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி சுகாதாரதுறை சார்பில், 04.11.2023 அன்று மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்
கள்ளக்குறிச்சி மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து தொடங்கி
கச்சிராப்பாளையம் சாலையில் குதிரைச்சந்தல் பேருந்து நிறுத்தம் வரை 4 கி.மீ
தொலைவிற்கு நடந்து சென்று மீண்டும் திரும்பி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
வந்தடையும் நடைபயிற்சியினை தொடங்கி வைக்க உள்ளார்கள்.
இத்திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி
நடப்போம் நலம்பெறுவோம் திட்டம் குறித்து மாவட்ட நடைப்பயண குழுவின்
ஆலோசனைபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர்
மரு.எஸ்.ராஜா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலிருந்து தொடங்கி
கச்சிராப்பாளையம் சாலையில் குதிரைச்சந்தல் பேருந்து நிறுத்தம் வரை கள ஆய்வு
மேற்கொண்டதன்படி நடைபயிற்சிக்கான பாதை முடிவு செய்யப்பட்டது.
மேலும், நடப்போம் நலம்பெறுவோம் திட்டத்தில் பொதுமக்கள் தங்களது உடல்நலம்
காக்கும் பொருட்டு நடைபயிற்சி மேற்கொள்ள முன்வர வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி
மாவட்ட மக்கள் தன்னார்வத்தோடு இதில் கலந்து கொண்டு இதய நோய், இரத்தழுத்த
நோய், நீரிழிவு நோய், மன அழுத்த நோய் போன்றவற்றிலிருந்து தற்காத்து கொள்ள
வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.















