இயற்கை விவசாயம் முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14.03.2023 அன்று தமிழ்நாட்டு மக்களின் உடல் நலத்தை காக்கவும் , மண்வளம் , இயற்கை வளத்தை காக்கவும் , நீடித்த நிலையான வேளாண்மையை ஊக்கப்படுத்தவும் , அங்கக வேளாண்மை கொள்கையை வெளியிட்டார் . அதன்படி , அங்கக வேளாண்மை என்பது செயற்கை இரசாயன உரம் , பூச்சி கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி , இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் சாகுபடி செய்து மண் வளத்தை பாதுகாப்பதாகும் . அங்கக வேளாண்மையில் , மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் , அங்கக கழிவுகளை நன்றாக மட்கச்செய்து , அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணுக்கு அளித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன . நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும் , சீராகவும் வெளியிடுகின்றன . இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதால் , நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் .
இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி , சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு " நம்மாழ்வார் விருது ” வழங்கப்படும் என மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி , நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் , ” அக்ரிஸ்நெட் " ( AGRISNET ) வலைதளத்தில் எதிர்வரும் நவம்பர் 30 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ .100 , குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும் , முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வெண்டும் , குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும் , வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் .
மேலும் , இதில் வெற்றி பெரும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு , சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும் . முதல் பரிசு ரூ .2.50 இலட்சம் மற்றும் ரூ .10 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் , இரண்டாம் பரிசு ரூ .1.50 இலட்சம் மற்றும் ரூ .7 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் , மூன்றாம் பரிசு ரூ .1 லட்சம் மற்றும் ரூ .5 ஆயிரம் மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும் . நம்மாழ்வார் விருதுக்கான விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .















