ஓய்வூதியர் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் , சென்னை ஓய்வூதிய இயக்குநர் திரு.டி.ஸ்ரீதர் அவர்கள் முன்னிலையில் இன்று ( 10.08.2023 ) நடைபெற்றது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் மற்றும் இதர கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்றைய தினம் ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு மருத்துவமனைகளில் தாங்கள் செலவு செய்யும் மருத்துவ தொகைகளை உடனுக்குடன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கிடவும் , ஓய்வூதியர்கள் றக்கும்போது வழங்கப்படும் தொகையினை உடனுக்குடன் வழங்கிடவும் , மருத்துவமனைகளில் அதிக நேரம் காத்திருக்காமல் தங்களுக்கென தனி அமைப்பினை ஏற்படுத்திடவும் கோரிக்கை வைத்தனர் .
கோரிக்கையினை பரிசீலனை செய்த சென்னை ஓய்வூதிய இயக்குநர் அவர்கள் மருத்துவமனைகளில் ஓய்வூதியர்கள் செலவு செய்யும் தொகையினை குறுகிய காலத்திற்குள் அவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்திகீழ் திரும்ப வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் , இறப்பிற்கான தொகையினை ஓய்வூதியர்களுக்கு உடனுக்குடன் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் . மேலும் , மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் செயல்படும் மருத்துவமனைகள் , எந்தெந்த நோய்களுக்கு எவ்வளவு மருத்துவ செலவுகள் அரசு நிர்னயம் செய்துள்ள விவரம் மற்றும் அருகாமை மருத்துவமனைகள் குறித்த விவரங்கள் கொண்ட செயலி உருவாக்கப்பட்டு விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என சென்னை ஓய்வூதிய இயக்குநர் அவர்கள் தெரிவித்தார் .
இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் அஞ்சல் வழியாக 9 மனுக்களையும் , குறைதீர்ப்பு கூட்டத்தில் 27 மனுக்களையும் அளித்துள்ளனர் . ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார் .
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( கணக்குகள் ) திருமதி.வி.மலர்விழி , மாவட்ட கருவூல அலுவலர் திரு.ஆர்.பாபு , தனித்துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம் ) திருமதி.பெ.இராஜலட்சுமி , கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சு.பவித்ரா , உதவி ஆணையர் ( கலால் ) திரு.பா.ராஜவேல் , அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .















