கரும்பு விவசாயிகள் , கரும்பு வெட்டுக்கூலி ஆட்கள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினருடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , கரும்பு விவசாயிகள் , கரும்பு வெட்டுக்கூலி ஆட்கள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் ஆகியோர்களுக்கான முத்தரப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் இன்று ( 22.08.2023 ) நடைபெற்றது .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , கரும்பு பயிர் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது . அதனடிப்படையில் , 2023-2024 ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டுக்கூலி நிர்ணயம் செய்வதற்கான முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது . இதில் கரும்பு அரவை பருவம் முதல் ஆரம்பம் முதல் முடியும் வரை சீரான வெட்டுக்கூலி நிர்ணயம் செய்வது கரும்பு சர்க்கரை ஆலையில் அரவை பிழித்திறனுக்கு ஏற்ப கரும்பு நடவு சாகுபடி செய்வது , கரும்பு அறுவடையை 12 மாதத்திற்கு மிகாமல் அறுவடை செய்வது , அந்தந்த ஆலைப்பகுதிக்கு உட்பட்ட கரும்புகளை அந்தந்த ஆலைகளிலேயே அரவைக்கு வழங்கிடுவது , பதிவு செய்யாத கரும்புகளை அரசு அனுமதி பெற்ற இதர ஆலைகளுக்கு அனுப்புவது மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்களை சம்மந்தப்பட்ட ஆலை பகுதியிலேயே கரும்பு அறுவடை பணிகளை செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது .
இக்கூட்டத்தில் , கரும்பு விவசாயிகள் , கரும்பு வெட்டுக்கூலி ஆட்கள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை சுமூக நிலை ஏற்பட்டது . மேலும் , மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர் .
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருணாநிதி , மேலாண் இயக்குநர் / வருவாய் அலுவலர் மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி 1 கூட்டுறவு சர்க்கரை ஆலை திரு.பெ.அரவிந்தன் , இணை இயக்குநர் / மேலாண் இயக்குநர் , கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை திரு.பி.எம்.முருகேசன் , செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.இரா.முத்துமீனாட்சி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை ) திரு.ரெ.விஜயராகவன் , பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி திரு.க.ரமேஷ் , வேங்கூர் பன்னாரியம்மன் தனியார் சர்க்கரை ஆலை , முன்டியம்பாக்கம் ராஜஸ்ரீ தனியார் சர்க்கரை ஆலை ஆகிய சர்க்கரை ஆலைகயின் கரும்பு விவசாயிகள் கரும்பு வெட்டுக்கூலி ஆட்கள் , விவசாய சங்க பிரதிநிதிகள் , விவசாயிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் .















