கல்வி , வாழ்வில் உயர்வதற்கு மிக அவசியமான ஒன்றாகும் எனவே மாணவ மாணவியர்கள் உயர்கல்வி கட்டாயம் கற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் மேல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை உயர் கல்வியில் சேராத மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் " உயர்வுக்குபடி ” என்ற 2 ஆம் கட்ட வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் ( 01.07.2023 ) நடைபெற்றது .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாணவ மாணவியர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் எனவும் , உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் . அதன்படி , 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்திட நான் முதல்வன் திட்டத்தில் " உயர்வுக்குப்படி ” என்ற வழிகாட்டுதல் விழிப்புணர்வு முதலாம் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி வருவாய் கோட்ட அளவில் 24.06.2023 அன்று நடத்தப்பட்டது . அதனை தொடர்ந்து , 2 ஆம் கட்டமாக திருக்கோவிலூர் கோட்டதிற்குட்பட்ட மாணவர்களுக்கு இன்றைய தினம் உளுந்தூர்பேட்டையில் நடத்தப்பட்டு வருகிறது .
இந்நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களுக்கு உயர்கல்வி சேருவது தொடர்பான வழிகாட்டுதல்களும் , தன்னம்பிகையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது . கல்வி , வாழ்வில் உயர்வதற்கு மிக அவசியமான ஒன்றாகும் . தன்னம்பிக்கையுடன் பயின்றால் நம்முடைய இலக்கை எளிதில் அடைய முடியும் . கல்வி பயில்வதனால் சமூகத்தில் நல்ல மரியாதையும் கிடைக்கும் . நானும் இந்நிலையை ( IAS ) அடைய கல்வி தான் முக்கியமானதாக இருந்தது . ஆகையினால் , சிறந்த கல்வி முறையை தேர்ந்தெடுத்து உயர்கல்வி கடுமையாக பயின்றால் எதிர்காலம் பிரகாசமாக அமையும் . கல்வியோடு சேர்த்து பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் . படிப்பிற்கு வயது தடையில்லை , முயற்சியும் ஆர்வமும் இருந்தால் போதும் . நேரத்தை வீனடிக்காமல் படித்திட வேண்டும் .
மேலும் , இங்கு வருகை புரிந்துள்ள மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் அரசு அலுவலர்கள் மற்றும் வழிகாட்டு நிபுனர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது . இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள உயர்கல்வியில் உடனடியாக சேர்ந்து படித்திட வேண்டும் . உங்களுக்கு உதவிடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் , தொழில்நுட்ப கல்லூரிகள் , தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் இதுவரை நிரப்பப்படாத உள்ள பாடப்பிரிவுகளை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதனை பயன்படுத்தி உயர்கல்வி பயில சேர்ந்திடவேண்டும் .மேலும் உயர்கல்வியில் சேரும் பெண்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலுமாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும் . உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் அரசு விடுதியில் உணவுடன் இலவசமாக தங்கி பயிலலாம் . மேலும் , இவ்வாய்ப்பினை இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் தெரிவித்தார் .















