கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இலச்சினையை ( Logo ) காணொலி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியை தொடர்ந்து , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ( 10.08.2023 ) நடைபெற்றது .
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ( GIM 2024 ) ஜனவரி 7 மற்றும் 8 , 2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது . சர்வதேச மற்றும் உள்நாட்டு தொழில் முனைவோர்கள் நமது மாநிலத்தில் முதலீடு செய்ய இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . நமது மாநிலத்தில் தொழில் முனைவோர்களை அங்கீகரிக்கவும் , அவர்களது தொழில் நுணுக்கத்தை வெளிப்படுத்தவும் இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும் .
தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிரா , குஜராத் , தெலுங்கானா , ஆந்திரபிரதேசம் , தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன . தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக கொண்டுவர ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழில் மையம் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதோடு , கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது . தற்போது தொழில் பயிற்சிகள் மட்டுமின்றி நாம் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புவிசார் குறியீடான மரச்சிற்பங்களை நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது . இவ்வாறு நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் . தொழில் வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து முதல் இடத்தை பிடிப்பதற்கு வருவாங்கால சந்ததியினருக்கு தொழில் பயிற்சிகளை கற்றுக் கொடுக்க வேண்டும் . கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் முனைவோர்கள் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
தொடர்ந்து , சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் . பின்னர் , 68 கைவினை கலைஞர்களுக்கு கைவினை தொழில் பதிவு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் .
இந்நிகழ்வில் , மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.அ.சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந் கொண்டனர் .















