கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுருக்கத்திருத்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் வெளியிட்டார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,
உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற
தொகுதிகளுக்குட்பட்ட 2024 சுருக்கத்திருத்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல்
அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (27.10.2023) வெளியிட்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின்
அறிவுரைகளின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 05.01.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த
பணியின் கீழ் 18 வயது (01.01.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பியவர்களின் பெயர்களை
வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பணி மேற்கொள்ளப்பட்டு, இன்று
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, இவ்வரைவு வாக்காளர் பட்டியலில்
27.10.2023 ன்படி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சாவடிகளில், 1,45,128
ஆண் வாக்காளர்களும், 1,41,241 பெண் வாக்காளர்களும், 53 இதர வாக்காளர்களும் என
மொத்தம் 2,86,422 வாக்காளர்கள் உள்ளனர். ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305
வாக்குச்சாவடிகளில், 1,33,608 ஆண் வாக்காளர்களும், 1,30,910 பெண் வாக்காளர்களும் 54 இதர
வாக்காளர்களும் என மொத்தம் 2,64,572 வாக்களர்கள் உள்ளனர். சங்கராபுரம் சட்டமன்ற
தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளில், 1,30,928 ஆண் வாக்காளர்களும், 1,31,919 பெண்
வாக்காளர்களும் 49 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,62,896 வாக்களர்கள் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடிகளில், 1,37,274 ஆண்
வாக்காளர்களும், 1,38,785 பெண் வாக்காளர்களும் 72 இதர வாக்காளர்களும் என மொத்தம்
2,76,131 வாக்களர்கள் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 1,274 வாக்குச்சாவடி மையங்களும், 5,46,938 ஆண்
வாக்காளர்கள், 5,42,855 பெண் வாக்காளர்கள் மற்றும் 228 இதர வாக்காளர்களும் என மொத்தம்
10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், மாவட்ட
தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய்
வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நியமன வாக்குச்சாவடி
அமைவிடங்கள் ஆகிய அலுவலகங்களில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுமக்களின்
பார்வைக்கு இன்று முதல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 04.11.2023, 05.11.2023, 18.11.2023, 19.11.2023 ஆகிய சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு சுருக்க திருத்த
முகாம்கள் நடைபெறும். இச்சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள், விடுதல்கள்
ஏதும் இருப்பின் அவற்றைக் கண்டறிந்திடவும், வாக்காளர் சேர்க்கை மற்றும் வாக்காளர் சேவைகள்
தொடர்பான பணிகள் மேற்கொள்ளவும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநிலக்கட்சிகளால் நியமனம் செய்யப்பட்டுள்ள "வாக்குச் சாவடி நிலை முகவர்களை" (Booth Level Agents)
அந்தந்த வாக்குச் சாவடிகளின் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுடன் (Booth Level officers)
தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குட்பட்டு ஒருங்கிணைந்து செயல்பட அனைத்து
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் மாவட்டப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்க
வேண்டும்.
மேலும் பொது மக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவோ திருத்தம்
மேற்கொள்ளவோ அல்லது நீக்கம் செய்திடவோ (https://voters.cci.gov.in) என்ற
இணையவழி மற்றும் voter help line mobile app மூலமும் தங்களது பெயர்களை பதிவு செய்திடலாம்.
இச்சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம்,
முகவரி மாற்றம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு பயனடையுமாறு மாவட்ட தேர்தல்
அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன், மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.ஜெ.யோகஜோதி, வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.















