கிராமங்களின் வளர்ச்சிக்கு , வங்கிகள் கிராமப்புறங்களில் புதிய கிளைகளை தொடங்கி சேவை செய்திட முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , விளம்பார் கிராமத்தில் இந்தியன் வங்கி புதிய கிளையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் இன்று ( 21.09.2023 ) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
கிராமபுறங்கள் அதிகம் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி கிளை விளம்பார் கிராமத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதற்காக மகிழ்ச்சியடைகிறேன் . தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் வங்கிகள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது . அதனால் வங்கிகளுடைய சேவை பொதுமக்களுக்கு மிக அவசியமாகிறது . இன்றைய காலகட்டத்தில் எந்த துறையில் தொழில் செய்பவர்களுக்கு வங்கியின் தேவைகள் உள்ளது . நம்மை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் நிலை வங்கிகளுக்கு உள்ளது . எனவே , வங்கிகளில் புதிய சேமிப்பு கணக்குகளை தொடங்கி வைத்துக்கொள்ள வேண்டும் . வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் மற்றும் தொலைபேசி எண்களை இணைத்துக் கொள்ளவேண்டும் .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்கள் . அதில் குறிப்பாக பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் என்னும் சிறப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள் . சுய உதவி குழு கடன்கள் , சுழல்நிதி , தொழில் முனைவோர்களுக்கு கடன் , கால்நடை கடனுதவி உள்ளிட்ட நலத்திட்டங்களை வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருகிறார்கள் . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊழியர்கள் அனைத்து கிராமப்புறங்களுக்கும் சென்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கி ஊதியம் வழங்கி வருகின்றனர் .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள் வங்கி கடன்களை தவறாமல் செலுத்தி வருகின்றனர் . இதனால் வங்கிகளுக்கும் சுய உதவி குழுக்களுக்கும் நல்ல உறவு ஏற்படுகிறது . விளம்பார் பகுதியில் இந்தியன் வங்கி கிளை தொடங்குவது இப்பகுதி மக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் . இதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமங்களின் வளர்ச்சிக்கு வங்கிகள் புதிய கிளைகளை தொடங்கி சேவை செய்திட முன்வரவேண்டும் . பொதுமக்கள் இதுபோன்ற வங்கி சேவையினை பயன்படுத்திவங்கிகளிடம் நல்லுறவை வளர்த்துக்கொண்டு பல்வேறு கடனுதவிகைள பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
பின்னர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாய அபிவிருத்தி திட்டம் , பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் , எலக்ட்ரிக் வாகனம் உள்ளிட்ட கடனுதவிகளை 24 பயனாளிகளுக்கு ரூ .45.60 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கினார் .
இந்நிகழ்வில் , மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் திரு.சு.சுந்தர்ராஜன் , இந்தியன் வங்கி சென்னை கள பொதுமேலாளர் திரு.க.ராஜேஷ்வர ரெட்டி , கடலூர் மண்டல மேலாளர் திரு.ந.கௌரிசங்கர் ராவ் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பெ.தியாகராஜன் , மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.ஏ.சந்திரசேகரன் , கள்ளக்குறிச்சி கிளை மேலாளர் திரு.பாலசுப்பிரமணியம் , விளம்பார் கிளை மேலாளர் திருமதி.ப.காயத்ரி , அரசு அலுவலர்கள் , ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .















