சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் ( 19.09.2023 ) திடீர் ஆய்வு மேற்கொண்டார் .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான , கௌரவமான , மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்திடவும் , இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதந்திர பணக்கொடை , துணிமணிகள் , பாத்திரங்கள் , கல்வி உதவி தொகை ஆகியவைகள் முறையாக வழங்கிட அறிவுறுத்தியதன் அடிப்படையில் சின்னசேலத்தில் 277 நபர்கள் வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .
பின்னர் , சின்னசேலம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இல்லவாசிகளின் குடியிருப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன . இதில் சேதமடைந்த குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவும் , குடியிருப்புகளில் பழுது நீக்கம் செய்திடவும் , அரசுக்கு உரிய முன்மொழிவு அனுப்பிடவும் , இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது . இம்முகாமில் வசிக்கும் 77 குடும்பங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன . மேலும் , முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடிநீர் , சாலை வசதிகள் , மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி வழங்கிட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இவ் ஆய்வின்போது , சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் திரு.கமலக்கண்ணன் , துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர் .















