சிறுதானிய சிற்றுண்டி அங்காடி அமைக்க தகுதியான சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்
2023-2024 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதாணிய ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு , இந்திய வேளாண்மையில் முதன்மையாக விளங்க கூடிய சிறுதானியங்கள் , விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் , உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன . தமிழ்நாடு அரசு சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அங்காடி ( Millet Cafe ) அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
சிற்றுண்டி அங்காடி அமைக்க தகுதிகளாவன , சுய உதவிக்குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ( PLF ) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் , சிறு தானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் / உற்பத்தியாளர் குழுக்கள் / கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன , மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று NRLM MIS இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் , கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு ஏ அல்லது பி சான்று பெற்றிருக்க வேண்டும் , உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும் , மகளிர் சுய உதவிக் குழு / உற்பத்தியாளர் குழு / கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும் .
மாவட்ட ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக் குழு / உற்பத்தியாளர் குழு / கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் . தகுதி உள்ள சுய உதவிக்குழுக்கள் இல்லை எனில் சம்மந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில் அருகாமையில் உள்ள வேறு மகளிர் குழுக்களை தேர்வு செய்யப்பட்டும் , இவ்வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி , மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்படவுள்ளது . மேலும் , சிறுதானிய சிற்றுண்டி அங்காடி ( Millet Cafe ) அமைக்க தகுதியான மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பங்களை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , நிறைமதி ( கிராமம் ) , நீலமங்கலம் ( அஞ்சல் ) , கள்ளக்குறிச்சி மாவட்டம் 606 213 என்ற முகவரிக்கு 20.07.2023 தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .















