தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு ( 2023-2024 ) 24.08.2023 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகைத்தர உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு ( 2023-2024 ) வருகைப்புரிந்து , நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வு செய்திட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு என்ற குழுவினை உருவாக்கினார்கள் . இக்குழுவினர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து , அரசின் அறிவிப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து உடனுக்குடன் அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர் .
அதன்படி , பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.டி.வேல்முருகன் அவர்களை தலைவராகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.அண்ணாதுரை , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அருள் , பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐ.கருணாநிதி , வானூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சக்ரபாணி , ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.பழனியாண்டி , ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.மணி , நாங்குநெரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி.மனோகரன் , அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.மோகன் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.ராமலிங்கம் , ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.சி.விஸ்வநாதன் , பெருந்துரை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர் . இக்குழுவினர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை ( 24.08.2023 ) காலை 09.00 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வும் , பிற்பகல் 03.00 மணிக்கு அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டமும் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் .















