செய்திகள் :

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை 25.08.2023 க்குள் மூடிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவிப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் , திறந்தவெளி கிணறுகள் , கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் . 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் , திறந்தவெளி கிணறுகள் , கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றினால் இளைஞர்கள் , குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகின்றன . இதனைக் கருத்தில் கொண்டு , உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது . மேலும் , திறந்த கிணறுகள் மற்றும் போர்வெல்களில் அபாயங்களைக் குறைக்க , அனைத்து திறந்தவெளி கிணறுகளையும் , செயலிழந்த ஆழ்துளை கிணறுகளையும் பாதுகாப்பாக மூடிவைத்திட வேண்டும் . 


பயன்படுத்தப்படாத குவாரிகளில் உள்ள பள்ளங்களில் குழந்தைகள் , இளைஞர்கள் குளிப்பதை தடுத்திட வேண்டும் . இதற்காக குவாரிகளை சுற்றிலும் வேலி அமைத்து எச்சரிக்கை பதாகைகளை வைத்திட குவாரி உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும் . சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனுக்குடன் மூடிடவும் , பள்ளங்களை சுற்றிலும் தடுப்புகளை நிறுவிடவும் எச்சரிக்கை வாசகங்களை வைத்திடவும் , மேம்படுத்தப்பட்ட பிரதிபலிப்பான்களை வைத்திடவும் வேண்டும் . பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க அபாயகரமான இடங்களுக்கு அருகில் உள்ள முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைப்பது அவசியம் . கிராம நிர்வாக அலுவலர்கள் , கிராம உதவியாளர்கள் கிராமங்களில் உள்ள செயல்படாத ஆழ்துளை கிணறுகளை கண்காணித்து , அவற்றை மூடிட வேண்டும் . ஊராட்சி மன்ற தலைவர்கள் , ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் செயல்படாத ஆழ்துளை கிணறு குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை மூடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் . 


மேலும் , ஆழ்துளை கிணறுகள் , திறந்தவெளி கிணறுகள் , கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் போன்ற இடங்கள் குறித்தும் , அந்த இடங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருந்திடவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் . தமிழக அரசால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் . இப்பணிகளில் ஒப்பந்ததாரர்கள் , குத்தகைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் . 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் , மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் , ஆழ்துளை கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற குவாரி குழிகளை கண்டறிந்து , 25.08.2023 க்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இஆப . , அவர்கள் அறிவுறுத்தினார் .