புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய மாணவிகளை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் கண்டறிந்து சேர்த்திட வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் . இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 27.07.2023 ) நடைபெற்றது .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் , அதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும் . இத்திட்டம் மாவட்ட சமூக நலத்துறை மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று , உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது . எனவே , இத்திட்டத்தில் பயன்பெற முதலாம் ஆண்டிலேயே மாணவிகளை கண்டறிந்து சேர்வதற்கான அனைத்து பணிகளும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் மேற்கொண்டு , கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அந்தந்த கல்வி நிறுவன வளாகங்களில் புதுமைப்பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏற்படுத்தி , துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும் .
மேலும் , ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியான முதலாம் ஆண்டு மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் . மாணவிகள் மாதம் , மாதம் ஊக்கத்தொகை பெறுவதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்திட வேண்டும் . இத்திட்டத்தின்கீழ் இதுவரை ஊக்கத் தொகை பெறாத தகுதியான மாணவிகளின் பட்டியலை கண்டறிந்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு வங்கி கணக்குகள் ஏற்படுத்திட வங்கி சிறப்பு முகாம்கள் கல்லூரியிலே ஏற்பாடு செய்திட வேண்டும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபாடு காட்டாத கல்லூரி நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இக்கூட்டத்தில் , மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.எஸ்.தீபிகா , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா , அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .















