செய்திகள் :

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் நடைபெற்றது

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் போதைப் பழக்கத்திற்கான எதிர்ப்பு குறித்து மாற்றுத்திறனாளிகளின் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள்  ( 11.08.2023 ) கொடியசைத்து தொடங்கி வைத்தார் . 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப் பழக்கத்திற்கான எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் , காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பொதுமக்கள் போதைப்பழக்கத்தில் இருந்து மீளவும் , போதைப் பொருட்களை முற்றிலுமாக தவிர்த்திடவும் விழிப்புணர்வு வாசகங்களுடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியில் 150 மாற்றுத்திறனாளிகள் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருடன் கலந்து கொண்டனர் . இப்பேரணி கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலைகளில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது . தொடர்ந்து , போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர் . 


பின்னர் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் " போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சி நடத்திட அறிவுறுத்தியதன்படி , கள்ளக்குறிச்சி மாவட்டம் , தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நா.மோகன்ராஜ் , அவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவ , மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர் . மேலும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து காவல்துறையினரும் , மாவட்டத்தில் உள்ள 121 பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 21,955 மாணவ , மாணவியர்களும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர் . 


உறுதிமொழி : 


" போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் , நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன் , மேலும் எனது குடும்பத்தினரையும் , நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன் . போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.போதைப் பொருட்களின் உற்பத்தி , நுகர்வு , பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கஅரசுக்குத் துணைநிற்பேன் . மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் ” என்று உளமார உறுதிமொழி ஏற்கப்பட்டது . 


தொடர்ந்து , போதைப்பழக்கத்திற்கு எதிரான பள்ளி மாணவ , மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , உதவி ஆணையர் ( கலால் ) திரு.பா.ராஜவேல் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்ரமணி , முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா , பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் , பள்ளி மாணவ , மாணவியர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர் .