செய்திகள் :

மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் கண்காட்சி 27.07.2023 முதல் 05.08.2023 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் , கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மாவட்ட அளவிலான கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார் , இ.ஆ.ப . , அவர்கள் இன்று ( 27.07.2023 ) தொடங்கி வைத்தார் . 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர்களின் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைவதற்காகவும் , பெண்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் , மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக அளவில் ஊக்கத்தொகையுடன் கூடிய வங்கி கடன்கள் வழங்கி , அதன்மூலமாக புதியதாக தொழில் தொடங்குவதற்கும் , வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பதற்கும் , இதர வருமானம் ஈட்டும் வகையில் உற்பத்தி பொருட்கள் செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வருகிறார்கள் . இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தை படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான விற்பனை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது . 


அதன்படி , கள்ளக்குறிச்சி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மண்டபத்தில் 30 க்கும் மேற்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டது . இக்கண்காட்சியானது , 27.07.2023 முதல் 05.08.2023 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது . கண்காட்சியில் மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரித்த பொம்மைகள் , மூங்கிலில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் , புடவைகள் , அணிகலன்கள் , கல்வராயன்மலை மிளகு சிறுதானியங்கள் , இயற்கை வேளாண்மை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள மளிகை பொருட்கள் , பாரம்பரிய அரிசி ரகங்கள் , குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் சத்தான சிறுதானிய தின்பண்டங்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன . 


மேலும் , சுய உதவி குழு பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்திட அனைத்து தரப்பு பொதுமக்களும் இக்கண்காட்சியை பார்வையிட்டு , அதிக அளவில் பொருட்களை வாங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் . 


இக்கண்காட்சியில் , மகளிர் திட்டம் ( திட்ட இயக்குநர் ) திரு.சு.சுந்தர்ராஜன் , உதவி திட்ட அலுவலர்கள் திரு.கார்திகேயன் , திரு.மாதேஷ் , வட்டார இயக்க மேலாளர் திரு.சதிஷ் குமார் , வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் , 30 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் .