மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப . , அவர்கள் தெரிவித்துள்ளார் .
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படும் இ - சேவை தளம் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது . கல்வி உதவித்தொகை விண்ணப்பம் , உதவி உபகரணங்கள் விண்ணப்பம் , மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பம் , திருமண நிதியுதவி விண்ணப்பம் மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஆகிய ஐந்து திட்டங்கள் முதற்கட்டமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
எனவே , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள இ - சேவை மையம் அல்லது இணையதளத்தை பயன்படுத்தி ஆகஸ்ட் 2023 மாதம் முதல் மேற்கண்ட திட்டங்களின்கீழ் விண்ணப்பிக்கலாம் . இத்திட்டங்களுக்கு இம்மாதம் முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் , கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் .















