வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் , வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் இன்று ( 12.09.2023 ) நடைபெற்றது .
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வடகிழக்குப்பருவ மழை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளபடி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கினைப்புக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது . கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . குறிப்பாக மழை சேதம் மற்றும் பேரிடர் சேதங்கள் ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்து அப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்காலங்களில் அதிகம் பாதிக்க கூடிய 6 இடங்களும் , மிதமாக பாதிக்க கூடிய 2 இடங்களும் , குறைவாக பாதிக்க கூடிய 19 இடங்களும் என மொத்தம் 27 இடங்கள் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது . அப்பகுதியில் முன்னேற்பாடு பணிகளாக நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் , மணல் மூட்டைகளை இருப்பு வைத்தல் , தடுப்பு கட்டைகள் ஏற்படுத்துதல் மற்றும் மழை சேதங்களை மேற்கொள்வதற்கு பேரிடர் மீட்புக்குழுவினருடன் தன்னார்வளர் குழுக்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் .
மேலும் , ஜெனரேட்டர் , ஜே.சி.பி. , பொக்லைன் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரம் , பவர் பம்புகள் , அவசர கால மின்சார்ஜ் லைட்டுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திறியும் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகளை பிடிப்பதற்கு பாம்பு பிடிப்பவர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . மழை வெள்ளத்தால் பாதிக்க கூடிய பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களை மீட்பதற்கு தேவையான பேருந்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . பொதுப்பணித்துறையினர் அனைத்து ஏரி , குளம் ஆகியவற்றில் ஆகாய தாமரை கொடிகளை அகற்றி , நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் . நெடுஞ்சாலை துறையினர் சிறுபாலங்கள் , சாலைகள் உடைப்பு ஏற்படும் பொழுது அதனை சரிசெய்வதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் .
மேலும் , மழை வெள்ள காலங்களில் கால்நடைகளுக்கு நோய்த்தொற்று மற்றும் இதர இடர்பாடுகளை மேற்கொள்ள கால்நடை மருத்துவக்குழுக்களும் , பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிடவும் , மின்விபத்துகள் ஏற்படாதவாறு காத்திட மின்சாரத்துறைஅலுவலர்களைக் கொண்ட குழுக்கள் ஏற்படுத்திடவும் , மழை வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு போதுமான நிவாரண முகாம்கள் ஏற்படுத்திடவும் , பொதுமக்களுக்கு நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்திட மருத்துவக்குழுக்கள் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்குப்பருவ மழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை , காவல்துறை , தீயணைப்புத்துறை , பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சித்துறை , கால்நடைத்துறை , வேளாண்மைத்துறை , பேரூராட்சித்துறை , நகராட்சித்துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள வேண்டும் . அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுபாட்டு அறை துவங்கி 24 மணி நேர சுழற்சி பணிக்கு அலவலர்கள் நியமனம் செய்திட வேண்டும் . பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மீட்பு பணிகள் மற்றும் உதவிகளுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக பேரிடர் மேலாண்மை துறை கட்டுபாட்டு அறை எண் 04151-228801 / 1077 என்ற எண் ஏற்படுத்தப்பட்டள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார் .
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சத்தியநாராயணன் , மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.ஜவஹர்லால் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ச.செல்வராணி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) மரு.து.சுரேஷ் , கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.சு.பவித்ரா , திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ரெ.கண்ணன் , வேளாண்மை இணை இயக்குநர் திரு.ச.கருணாநிதி , கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை , திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் , அனைத்து வட்டாட்சியர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் .















